சனி, ஜனவரி 14, 2012

தைத் திருநாள் (பொங்கல்)

 நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்.......

பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே
உண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமே
முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே
இந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே
ஆடல் வாழிய அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக்கும் பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை
பொங்கிடப் பொங்கலோ பொங்கல் என்றார்த்தே
புரையீர் வெல்லம் புலிப்பல் போன்ற
ஏலம் பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்து
இருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக்கு உழவர் வாழ்த்தி அத்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!





                                                          - பாரதிதாசன்

                                                     

நீர்,நிலம்.காற்று,ஆகாயம்,சூரியன் ஆகிய இயற்கை சக்திகளுக்கும், நமக்காக உழைக்கும் கால் நடைகளுக்கும், அறுவடை காலத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட , உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கொண்டாடிய விழா இந்த தைத் திருவிழா.


மதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப் படவேண்டிய இந்த விழா சமத்துவ பொங்கல் என்ற புதுப் பெயரை சூட்டி கொண்டாடப் பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

மதங்களை மறப்போம், மனிதனாக இருப்போம்......

ஞாயிறு, ஜனவரி 01, 2012

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


      இந்த வருடம் நாம் எப்படி இருக்கப்போகிறோம் ?


கடந்த வருடங்களில் நிகழ்ந்த மகிழ்ச்சியான, அதிர்ச்சியான சம்பவங்களை நினைத்து புது வருடத்தின் முதல் நாளில் நம் எல்லோர் மனதிலும் கேட்டுக் கொள்கின்ற ஒரு கேள்வி இது.

 பன்னிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருடங்கள் மாறுவது போல், நமது எண்ணங்கள், கனவுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.  இந்த வருடமாவது இந்த கனவுகள் நிறைவேறுமா அல்லது இதை நிறைவேற்ற எந்த விதமான முயற்ச்சிகள் எடுக்க வேண்டும் என  ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பமும் நம்மை புது மனிதனாக மாற்றிக்கொள்கிற சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

  ஆண்டுகள், கனவுகள் இவை இரண்டும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவே இல்லாத ஒரு பயணமாக நம் வாழ்வில் எதிபார்க்காத சிறிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டு கடந்து செல்கின்றன.

  ஒவ்வொரு ஆண்டும் குளிர்,மழை,கோடை,வசந்தம் என இந்த நிகழ்வுகள் பன்னிரெண்டு மாதங்களாக வரயறுக்கப்பட்டு அதனுடய இயல்பை மீறாமல் அதற்கு உண்டான பலனை சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தந்துவிட்டு போகின்றன.

   அதேபோல் ஏமாற்றம்,வருத்தம்,கோபம்,மகிழ்சி இவை யாவும் நாம் காண்கின்ற கனவுகளை பொறுத்தும் அதை நிறைவேற்ற நாம் எடுத்துக்கொள்கின்ற முயற்சியைப் பொறுத்தும் அமைகின்றன. தோல்வி,ஏமாற்றம்,தடைகள், ஆகிய அனுபவத்தை நம்முடய விடாமுயற்சியால் வெற்றி காண்போம்.


நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..............

நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம்.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.............................

ஏன்றென்றும் அன்புடன்
பாலா