வியாழன், டிசம்பர் 15, 2011

அணை உடைந்தால்... இந்தியா உடையும்! - ஆனந்த விகடன்


இந்த கட்டுரையை படிக்கும் யாருக்காவது மலையாள மொழியில் எழுதத் தெரிந்தால் எனக்கு எழுதி அனுப்பவும்.  அவர்களையும் இந்த கட்டுரையை படிக்கச் செய்வோம்.
bala.kentz@gmail.com



அணை உடைந்தால்... இந்தியா உடையும்!

சமஸ்
ஓவியம் : ஹரன்
எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!''
- கோயபல்ஸ்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது.
உண்மை 1: அணை, நோக்கங்கள், லாபங்கள்!
ந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால், இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான், நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான்.
தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில், கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால், அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டு, ஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!
முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.
தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!
உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!
பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது.
1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோது, கேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில், அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படி, புதிய வடிகால் மாடங்கள், மதகுகள் அமைக்கப்பட்டன. ஆக, பழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார். 
உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!
''அணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை 6 ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால், அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவே, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும், இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம், கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும், அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளி, ஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?
முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால், சற்றே பெரிய 4 குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.
புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு, நாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும், சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால், அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால், அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, அணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர்
எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள், ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.
இவை தவிர, எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம், கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் 3 இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, ஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.
உண்மை 4: உடையப்போவது அணை அல்ல!
காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும்  1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால், இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை.
முல்லைப் பெரியாற்றில், அணை பலமாக இருந்தபோதே, அணை யைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண் டது தமிழகம். அணையைப் பலப் படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால், தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒருபோகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?
காவிரியோ, முல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோ, கேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்ல; நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.
ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண் கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இனி செயய வேணடியது எனன?
 இரா.வெங்கடசாமி, நீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.
''நதிகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு, அங்குள்ள நீர் வளத்தை, தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோல, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின், தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் 4 அடி அதிகப்படுத்தி, நீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலே, நீர் வெளியேறும்படி செய்ய வேண்டும்.
நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழ, அகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''


நன்றி
ஆனந்த விகடன்




நன்றி
பாலா



சனி, டிசம்பர் 10, 2011

பாரதி

டிசம்பர் 11 2011 பாரதியின் 130 வது பிறந்த நாள்.






’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’



பாரதி என்ற பெயரை உச்சரித்த உடன் நமக்கு உண்டாகும் பலவிதமான உணர்வகளை வெளிப்படுத்த சரியான ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

தமிழ் மொழிக்கு புத்துயிர் அளித்து, புது சக்தியை ஊட்டியவன்.

என்னை போன்ற சாதரன மனிதனும் புரிந்து கொள்கின்ற வகையில் அறிவுக் கவிதைகளை அழகுத் தமிழில் அளித்தவன்.

ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை,  மொழிப்பற்று போன்ற புரட்சி கவிதைகளை கொடுத்து  இனம், மொழி, சுதந்திரம், தேசம்  பற்றிய எழுச்சியயையும், மலர்ட்சியையும் ஏற்படுத்தியவன்.

பாரதியின் பிறந்த நாளை கொண்டாடுவோம். போற்றுவோம்.









திங்கள், டிசம்பர் 05, 2011

முல்லை பெரியாறு- பிரதமருக்கு வைகோ வின் கடிதம்

தமிழ் நாடு - கர்னாடகம் இடையே இருக்கும் காவிரி நதி நீர் பிரச்சனை போலவே, நீண்ட காலமாக தமிழகம்- கேரளா விற்கு முல்லை பெரியாறு. முன்பே புதிய அணை கட்டும் திட்டத்தில் இருக்கும் கேரளா அரசிற்கு  சமீபத்தில் வெளியான DAM-999 என்ற படத்தினை காரணம் காட்டி கேரளா அரசு புதிய அணையை கட்ட மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பிரச்சனை பற்றி எழுத முயன்ற போது எனக்கு முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுமையான வரலாறு தெரியாது என்பதனால் எழுதாமல் இருந்தேன். அதனால் சமீபத்தில் வைகோ அவர்கள் பிரதமருக்கு எழுதிய முழுமயான கடிதம் படிக்க நேர்ந்தது அதை என்னுடய இந்த வலைப் பதிவில் பதிகிறேன்.




மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்:  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கை - குறித்து.

முல்லைப் பெரியாறு அணை குறித்த தமிழக மக்களின் தீவிர அச்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கேரள அரசாங்கத்தின் ஆதரவோடு அங்குள்ள அரசியல்  கட்சிகளின் மோசமான, தீய எண்ணத்தோடும், சட்ட விரோத அச்சுறுத்தலோடு கூடிய நடவடிக்கைகள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முல்லைப் பெரியாறு குறித்து நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பின்வரும் பகுதிகளை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“முல்லைப் பெரியாறு அணை 1895-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர்-கொச்சின் அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையில் சட்டபூர்வமான உரிமை உள்ளது.

1976-ஆம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைப் பெறுவதற்காக, 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, சுயநலமிக்க குறுகிய எண்ணம் படைத்த சிலரால் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய்யான எச்சரிக்கையைப் பரப்பி வருகின்றனர். அப்படி குறுகிய எண்ணம் படைத்தவர்களின் முயற்சியால் அணையின் தண்ணீர் தேக்கும் உயர அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து உள்ளனர்.

அதன்மூலமாக தமிழக மக்களுக்குச் சரிசெய்ய முடியாத இழப்பையும் இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரத்தே இல்லாமல் செய்துள்ளார்கள்.

1979-ஆம் ஆண்டு கேரள அரசாங்கம் இந்த அணை தொடர்பாக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அணைப் பகுதியைப் பார்iவியிட்ட பிறகு அணையின் நீர்மட்ட உயரத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்தலாம்; பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அணையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று சான்று வழங்கியுள்ளார்கள்.

இரு மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையின் பலத்தைக் கூட்டுவதற்குத் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குக் கேரள அரசு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கேரள அரசாங்கம் சட்ட விரோத நடவடிக்கைகளில்  ஈடுபட்டுக் கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் சவால் விடுகின்ற வகையில் நடந்து கொள்கின்றது.

2006-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று கேரள சட்டமன்றத்தில் கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புத் திருத்த மசோதா 2006 கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 2006 மார்ச் 18-ஆம் தேதியன்று சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயக விரோத சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கேரள அரசாங்கத்திற்கு எந்தவொரு அணையையும் நீர்த்தேக்கத்தையும் உடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 வரை கேரளாவின் அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெறவில்லை. ஆனால், 2006-ஆம் ஆண்டு சட்டதிருத்த மசோதாவின் மூலமாகக் கேரளாவின் நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை முதலிடத்தில் சேர்க்கப்பட்டு  அணையின் முழுக் கொள்ளளவும் 136 அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் சட்டத்தில் கேரள அரசாங்கம் மிகவும் துணிச்சலாக நீர் ஆணையத்தின் நடவடிக்கையும், கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையும் இந்தியாவின் எந்த நீதிமன்ற வரம்புக்கும் உட்பட்டதல்ல என்ற ஒரு பிரிவும் இடம் பெறச் செய்துள்ளது. இது இந்திய அரசாங்கத்திற்கே கேரள அரசால் விடப்பட்ட சவால் ஆகும்.”

எங்களுடைய கவலைதோய்ந்த வேண்டுகோள் மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் அணையின் உறுதித் தன்மையையும், பாதுகாப்பையும் ஆய்வு செய்த வண்ணம் உள்ளார்கள்.

உயர்ந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக அணையின் உறுதியைப்  பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது உண்மையான செய்தியாகும்.

மூன்று முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

1)      கான்கிரீட் கலவை மூலமாக அணைக்குத் தொப்பி போன்ற பாதுகாப்பை உருவாக்குவது :

12,000 டன் கலவை மூலமாக அணையின் பலத்தைக் கூட்டி அதன் வாயிலாக எத்தகைய அழுத்தத்தையும்,

நிலநடுக்கப் பாதிப்பையும் தாங்குகின்ற வலிமையை உருவாக்கியுள்ளது.

2)      கம்பிவலத் தடத்தின் மூலம் நிலைக்கச் செய்வது :

ஆயத்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பை நங்கூரம் போலப் பயன்படுத்துவது.

3)      கான்கிரீட் மூலமாக அணையின் அடித்தளத்தைப் பாதுகாப்பது :

அணையின் அடிமட்ட அகலம் 144.6 அடியிலிருந்து 200.6 அடியாக மாற்றுவது இந்தியாவில் எந்தவொரு அணைக்கும் இல்லாத சிறப்பாக அடித்தள அகலம் அமைந்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி அணை 7 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கத்தைத் தாங்க வல்லது. ஆனால், நிலநடுக்கம் 5 ரிக்டர் அளவுக்கு மேல் அணை இருக்கும் பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை. வாதத்திற்கு 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும் என்றுவைத்துக் கொண்டாலும் குமுளியிலும், குமுளியைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிந்து  விழுந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்தக் கடிதத்துடன் காணொளிக் குறுந்தகடு ஒன்று இணைத்துள்ளேன். அதில் அணையின் உறுதித் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அணையை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தகுதிவாய்ந்த தமிழ்நாட்டைத் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களால்

தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் அணை உடையப் போவதாகவும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற உளவியல் ரீதியான பயத்தையும், பதட்டத்தையும் கேரள மக்கள் மனதிலே உருவாக்கி வருகின்றார்கள்.

இது ஒரு பொய்யான செய்தி. கேரள அரசாங்கம் அணையை உடைக்க முடிவெடுத்து விட்டது. அதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் புதிய அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் கடந்த 6 மாதங்களில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அந்தச் செய்தி உண்மையல்ல. நான்கு முறைதான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் முல்லைப் பெரியாறு அணை அருகில் ஏற்படவில்லை.

கேரள அரசாங்கம் புதிய அணையை ஏற்கனவே அணை இருக்கும் உயரத்தில் இருந்து கீழே தாழ்வான பகுதியில் கட்டத் திட்டமிட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் அணை கட்டும்போது கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற முடியாது.

இப்பொழுதுள்ள அணை உடைக்கப்படுமேயானால் தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85 இலட்சம் மக்கள் குடிதண்ணீருக்கும் வழியில்லாமல் அல்லல்பட நேரிடும். அதேநிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் தமிழகத்தின் தென்பகுதிகள் காலப்போக்கில் பாலைவனமாக மாற நேரிடும்.

மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அக்கிரமச் செயல்களில் கேரளத்தினர் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதியும், டிசம்பர் 4 ஆம் தேதியும் அணையை உடைக்க முயற்சித்துள்ளனர். ஒன்றாம் தேதி அன்று கேரளத்தினர் முல்லைப் பெரியாறு அணையை சேதப்படுத்த முயன்று அதனைத் தடுக்கப்போன கேரள மாநில போலீசாரையும்,

தாக்கியுள்ளனர். நேற்று டிசம்பர் 4 அன்று ஒரு வன்முறைக்கூட்டம் கடப்பாரையோடு, சம்மபட்டிகளோடு, இரும்புக் கம்பிகளோடு சென்று பேபி அணையை உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதனைப் தடுப்பதில் கேரள காவல்துறையை திணறிப்போயுள்ளது. அணையை உடைப்போம் என்று கேரள அரசே அறிவித்துவிட்டதால், அணையை கேரள போலீசார் பாதுகாக்க முடியாது. எனவே, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அங்கு குவிப்பதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை

எடுக்க வேண்டும். இதனையே தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளர்.

தமிழ்நாடு, கேரளாவுக்கு உணவு தானியங்கள், பால், காய்கறிகள், கால்நடைகள் போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுமேயானால் இரு மாநில மக்களிடையேயான சகோதர ரீதியான உறவுகள் பாதிக்கப்படும். அதன்வாயிலாக எதிர்பாராத பின்விளைவுகள்

ஏற்படும். இந்தியாவின் பரந்த நலன் கருதி நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மத்திய அரசு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். பழைய அணையைப் பாதுகாக்க வேண்டும்.

தங்கள் அன்புள்ள

(வைகோ)

திங்கள், நவம்பர் 21, 2011

அப்துல் கலாமின் அறிக்கையும் ஞானியின் விமர்சனமும்


தமிழ்நாடு சமீப நாட்களாக உண்ணாவிரதம், அமைதிப்பேரணி, ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்களால் பெரும் பரபரப்பாக இருக்கின்றன. இதற்கு சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பேரூந்து கட்டணம் உயர்வு, பால் விலை அதிகரிப்பு மற்றும் கூடிய விரைவில் மின் கட்டணமும் உயரும் என்ற அறிவிப்பு மட்டும் இன்றி கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்க எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் நடபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவான அப்துல் கலாமின் அறிக்கையும் அதற்கு ஞானி எழுதிய விமர்சனமும்.

அப்துல் கலாமின் அறிக்கை


தமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, அணுஉலை செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின்
நன்மைகளைப் பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப் பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தங்களது அறிவாற்றலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது.

அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன? அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்திதான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது.கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு (Dynamics of Geo&political and Market forces),, நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம் என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.

மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகளை தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்ப் போம்.
1.ஜப்பான் புகுஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாய மாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.
2.இயற்கை சீற்றங்களினால் அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவை வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
3.அணுசக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும், அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.
4.அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்தத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.
5.அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்
படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஓட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும். 
6.10,000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை
7.பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.

இது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளன, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெ ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஓரம் அமைந்துள்ள எல்லா அணுதி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றியும் அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்ய செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன். அத்துடன் என்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்ச்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக வும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களையும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் தி. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ததன் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தக்காலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1Century AD) கல்லணை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லணையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தாலோ கல்லணை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவத்துறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதெரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம்.

தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது. இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம்.

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு- ஞானி


வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் 
ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார்.
நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.
அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம்.
உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.
செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ?
1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.
விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?
இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?
ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?
இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.
விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ?
மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?
கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ?
ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ?
உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?
உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.
அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?
இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.
கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.
இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.

மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.
அன்புடன்
ஞாநி
(கல்கி 12.1.11 இதழில் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியுள்ளது)


வெள்ளி, நவம்பர் 04, 2011

கவிதைகள்

நட்பு




தப்பித் தவறி தட்டிவிடாதே
உன் தோள்மீது ஒட்டியது
மண் அல்ல என் நட்பு........................


நினைவுகள்


நீ பேசாமல் போன 
வார்த்தைகள்..............

நீ பார்க்காமல் போன
எனது நேசம்..............

நீ சீண்டாமல் போன 
என் இதயம்........

நீ தொலைத்துவிட்டு போன
என் காதல்.........

நீ தேடி அலைந்த 
என் நட்பு..........

நீ வேண்டாம் என்று போன
நான்...............

இவைதான் 
உன் நினைவுத் தூண்கள்................


மௌனம்


என்
 மனதில் பட்ட காயத்திற்கு
மருந்து தேவை இல்லை...........

இந்த
 மனதில் காயம்பட
காரணமாய் இருந்த..............

உன்
மௌனத்தை மட்டும்
கலைத்தால் போதும்..............








வியாழன், நவம்பர் 03, 2011

ஆனந்த விகடன்- ஏழாம் அறிவு விமர்சனம்


மிழர்களே மறந்த ஒரு தமிழனின் பெருமையைச் சமரசம் செய்து கொள்ளாமல் சினிமா ஆக்கியதற் காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வாழ்த்துக்கள்!
 சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி!  
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தர்மன், தன் குருவின் ஆணையின் படி சீனாவுக்குச் செல்லும் சமயம், அங்கு கொள்ளைநோய் ஒன்று மக்களைப் பலி கொள்கிறது. மூலிகை மருத்துவம் மூலம் நோயை ஒழிப்பவர், அந்த மக்களுக்கு தற்காப்புக் கலையையும் கற்றுத் தருகிறார். சீனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விஷம் உண்டு அங்கேயே சமாதிநிலை அடைகிறார் போதி தர்மன். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நிகழ்காலத்தில் இந்தியா மீது சீனா உயிரியல் யுத்தம் தொடுக்க இருக்கும் சூழல். போதி தர்மனின் பரம்பரையைச் சேர்ந்த சர்க்கஸ் கலைஞன் சூர்யாவுக்கு போதி தர்மனுடைய டி.என்.ஏ. அமைப்பு 83 சதவிகிதம் பொருந்தி இருப்பதைக் கண்டறிகிறார் ஜெனடிக் இன்ஜினீயரிங் மாணவி ஸ்ருதி. நோய்க்கொல்லிக் கிருமியைப் பரப்பவும் ஸ்ருதியைக் கொல்லவும் ஓர் உளவாளியை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்கிறது சீன அரசு. அந்த அசகாய உளவாளியின் திட்டத்தை முறியடிக்க சூர்யாவின் டி.என்.ஏ-வுக்குள் ஒளிந்திருக்கும் போதி தர்மனின் ஆற்றலைத் தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஸ்ருதி. 'போதி தர்மன்’ மீண்டு எழுந்தாரா... தமிழகத்தைக் காப்பாற்றினாரா என்பது பரபர... தடதட க்ளைமாக்ஸ்!
சீனாவிலும் வியட்நாமிலும் இப்போதும் யோகியாகக் கொண்டாடப்படும் போதி தர்மனைப் பற்றிய ஆரம்பக் காட்சிகள்...  சர்ப்ரைஸ் சந்தோஷம்!  
கனிவு ததும்பும் பார்வை முதல் தற்காப்புக் கலைக்கான உடல்மொழி வரை போதி தர்மன் அவதாரத்துக்கு இஞ்ச் இஞ்சாக உழைத்திருக்கிறார் சூர்யா. எதிரியை எதிர்கொள்ளும்போதும் மக்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உட்கொள்ளும்போதும் சலனம் இல்லாத அன்பு மட்டுமே வெளிப்படுத்தும் யோகியாக அப்படியே கூடு பாய்ந்திருக்கிறார் சூர்யா. சர்க்கஸ் கலைஞனாக வில்லனுக்குப் பயந்து ஓடி ஓடி ஒளிந்து, க்ளைமாக்ஸில் ஒட்டுமொத்தக் கோபம் திரட்டித் திருப்பித் தாக்குமிடத்தில் மிரள வைக்கிறார்.    
தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் லூஸுப் பெண் காதலியாக இல்லாமல், ஸ்ருதி கமலுக்கு நடிகையாக இது நல் அறிமுகம்! ஆனால், முகத்தில் பொங்கும் பொலிவும் இளமையும் உடல்மொழியில் மிஸ்ஸிங். ''காதலைத் தவிர வேறு எதுவும் தெரியாதா உனக்கு?'' என சூர்யாவிடம் கோபம் காட்டு வதிலும் அவரை போதி தர்மனாக மறுஉருவாக்கம் செய்யும் வேகத்திலும் ஈர்க் கிறார்.
அத்தனை வலிமையான போதி தர்மனை எதிர்க்கும் சீன வில்லன் கதாபாத்திரத்துக்கு மிரட்டல் சாய்ஸ் ஜானி ட்ரி நுயென்! ஐஸ் கத்தி கண்களைக்கொண்டே அசாத்திய காரியங்களைச் சாதிக்கிறார். அந்த நரம்பு உடம்பை இறுக்கி முறுக்கி வில்லாக வளைந்து எதிரிகளைத் துவம்சம் செய்யும்போது... டாங் லீ... செம ஸ்ட்ராங்லீ!
''ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒருத்தனைக் கொன்னதுக்குப் பேரு வீரம் இல்ல... துரோகம்!'' என சூர்யா பேசும் வசனம் செம சூடு. 'அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்க முடியாத தமிழுக்கும்’ என இறுதியில் திரையில் ஒளிரும் வரிகள் ஒரு சேர கோபத் தையும் துயரத்தையும் உள்ளுக்குள் தூண்டு கின்றன!
ஸ்ருதிக்கு சூர்யா கொடுக்கும் யானை லிஃப்ட், 'ஒருத்தவங்களப் பத்தி கெட்ட விஷயங்களை தெரிஞ்சுக்க குப்பைக் கூடை யைத் தோண்டு’ என்று சூர்யா சொன்ன உடன் ஜி-மெயிலின் த்ராஷ் ஃபோல்டரை ஸ்ருதி ஆராய்வது என்று ஆங்காங்கே 'அட’ போடவைக்கிறது முருகதாஸ் டீம். ஆனால், போகிறபோக்கில் ரிசர்வேஷனை ஏதோ ரெக்கமண்டேஷன் அளவுக்கு குற்றம் சொல்லிப்போவது எல்லாம் அபத்தம்!
கத்தியின்றி ரத்தமின்றி ஒற்றைப் பார்வை யிலேயே எதிராளியைச் சாய்க்கும் 'ஹிப் னாட்டிஸம்’ என்னும் நோக்கு வர்மம்... 'டேய்ய்ய்ய்ய்... டூய்ய்ய்ய்ய்ய்’ தமிழ் சினிமா வில்லன்களிடம் காணக் கிடைக்காத அதிசயம்! அத்தனை பேரை எளிதாக வசியப்படுத்தும் டாங் லீ, சூர்யாவிடம் தடுமாறும் இடத்தில் அள்ளுகிறது அப்ளாஸ். ஆனால், அதற்காக வில்லன் எதற்கெடுத்தாலும் 'நோக்கி’க்கொண்டே இருப்பதும் ஒரே நொடியில் எந்தத் திசையில் இருக்கும் எதிராளியையும் வசப்படுத்துவதும்... திரைக்கதையை இன்னும் கொஞ்சம் 'நோக்கி’ இருக்கலாம் சாரே!  
சுவாரஸ்யம் இல்லாத காதல் அத்தியாயம், லாஜிக் இல்லாத வில்லனின் நடமாட்டம் ஆகியவை ஒருகட்டத்துக்குப் பிறகு... முடியலை யுவர் ஹானர்! இப்படி ஒரு வில்லன் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது இந்திய உளவுத் துறைக்குத் தெரியவே தெரியாதா? விஷயம் தெரிந்த ஸ்ருதி அண்ட் கோ ஏன் போலீஸுக்கு ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் அலைகிறார்கள்? அட, அதைக்கூட விடுங்கள்... அத்தனை போலீஸ்காரர்களைக் கொன்ற, வீடியோவிலும் பதிவான டாங் லீயைக் கண்டுகொள்ளாமல் அத்தனை நாட்களும் தமிழகக் காவல் துறை என்னதான் செய்துகொண்டு இருக்கிறது?
'யம்மா யம்மா காதல் பொன்னம்மா’,  'முன் அந்திச் சாலையில்...’ பாடல்களில் மட்டுமே ஆறுதல் தருகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசை. 'ரிங்கா ரிங்கா’ பாடலை 'டாக்ஸி டாக்ஸி’யாகக் கேட்ட நினைவு. பின்னணி இசை... ம்ஹூம்!
போதி தர்மனைப் பற்றிய ஆரம்பக் காட்சி களிலும் அந்த சீனப் பயணத்திலும் பிரமாண்டமாக உழைத்திருக்கிறது ரவி கே. சந்திரனின் கேமரா. பார்த்துப் பழகிய குங்பூ கலையில், சினிமாவுக்கான கமர்ஷியல் சேர்த்திருக்கிறார் பீட்டர் ஹெயின். ஆனால், அத்தனை திறமைகள் நிரம்பிய வில்லனை க்ளைமாக்ஸில் வீழ்த்த கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசிக்க மாட்டாரா 'போதி தர்மன்’? சும்மா பறந்து பறந்து அடித்துக்கொண்டே இருந்தால் ஆச்சா?
சீனர்கள் பெருமிதம்கொள்ளும் ஒரு கலைக் குத் தமிழனே தந்தை என்று தொடக்கக் காட்சிகள் தரும் பெருமித உணர்வை அடுத்தடுத்த காட்சிகளில் தக்க வைத்துக்கொள்ளத் தவறுகிறது திரைக்கதை.
தமிழனின் திறமையை உலகுக்கு உணர்த்திய விதத்தில், 'ஆறாம் அறிவு’ சுட்டிக் காட்டும் குறைகளை மறந்தால், இந்த '7ஆம் அறிவு’ பெருமை கொள்ளவைக்கும் முயற்சி!

ஆனந்த விகடனுக்கு நன்றி.....

புதன், நவம்பர் 02, 2011

எதிர்பார்ப்பு


நிமிடத்தில் பார்த்துவிட்டு
நிதானம் கொள்ளும்
கண்கள்.....


மணியோசை எழுப்பிவிட்டு
மௌனமாய் ஆர்ப்பரிக்கும்
பாத கொலுசுகள்.....



புதிர் கவிதையை தந்துவிட்டு
புதைந்து போகும்
புன்னகை.......

ஜாடைப் பேச்சால் காதல்
ஜனனம் சொல்லும்
வார்த்தைகள்......


எல்லாம் உன்னிடத்தில்
எதிர்பார்ப்பு உன்னிடத்தில்.....................





ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஏழாம் அறிவும்-தமிழனும். உதய நிதிக்கு தங்கர்பச்சான் எழுதிய கடிதம்.

  தங்கர்பச்சான் எழுதிய கடிதத்தை இங்கு எழதும் முன்பு ஒரு செய்தியை சொல்லிவிடுகிறேன்.  ஏழாம் அறிவு திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு இடத்தில் கூட தமிழன் என்ற வார்த்தை உச்சரிக்கபடவில்லை என்று எனது நண்பர்கள் மற்றும் முக நூல் மூலம் அறிந்தேன். தமிழன் என்ற உணர்ச்சியை தூண்டிவிட்டு வியாபாரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  உண்மையாகவே தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டுமெனில் இங்கு பயன்படுத்திய அதே வசனத்தை அந்த மொழியிலும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கும் நம்மை பற்றி தெரிய ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். மேலும் தங்கர்பச்சான் எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் சொல்லிவிட்டேன் என்கிறார். உங்களுக்கு அந்த படைப்பாளிகளிடம் சொல்வதற்கு வாய்ப்பு உண்டு எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாததினால் இப்படி வலைப்பதிவில் சொல்கிறோம்.


தங்கர்பச்சானின் கடிதம்

    நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசிரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே தயார்ப் படுத்திவிட்டார்கள்.
கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும் ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய் இருப்பவர்கள் பல பேர் தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப ் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம் காரணம்.
இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும். ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு இன்றிருக்கிற அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள் இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல படைப்பாளிகளின் நிலை தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர் அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
அன்போடு
தங்கர் பச்சான்